facebook

ஐ.பி.எல் சாம்பியன் யார்? பரபரப்பான இறுதிப்போட்டியில் பஞ்சாப்- கொல்கத்தா இன்று மோதல்

பெங்களூரில் இன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல் ‘பிளே-ஆப்’ சுற்றில் அதிரடியாக நுழைந்த பஞ்சாப் அணி அனைத்து அணிகளை வெளியேற்றி விட்டது. கடைசியாக நடந்த போட்டியில் சென்னை அணியை ஷேவாக்கின் அசத்தல் சதத்துடன் வீழ்த்தி ஐ.பி.எல் கிண்ணம் எங்களுக்குத் தான் என்ற பாணியில் அதிரடியாக இறுதிப்போட்டிக்கும் நுழைந்தது.

இறுதிப் போட்டிக்கு முதன்முதலாகத் தகுதி பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தாவையும் வீழ்த்த தயாராகி விட்டது.

லீக் சுற்றுப் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே ஒன்றை ஒன்று எதிர்த்து தோல்விகளையும், வெற்றிகளையும் பெற்றுள்ளது.

அபுதாபியில் கிங்ஸ் லெவன் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்த, கட்டாக் மைதானத்தில் மே 11 ஆம் திகதி கொல்கத்தா அணி, கிங்ஸ் லெவனை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழி தீர்த்தது.

இறுதிப்போட்டியில் நுழைந்த பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் முன்னேற்றம் வேண்டும். சென்னை அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரெய்னா கிங்ஸ் லெவன் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 25 பந்துகளில் 87 ஓட்டங்களை விளாச, முதல் 6 ஓவர்களிலேயே 100 ஓட்டங்களை எட்டியது. இருப்பினும் மிட்செல் ஜான்சன், பர்வீந்தர் அவானா இன்று நிச்சயம் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுவர் என எதிர்பார்க்கலாம்.

உத்தப்பாவின் சிறந்த நிலைமை நிச்சயம் அவர் இன்று பெரிய சவாலாக இருப்பார் என்று நம்பலாம். கம்பீர், யூசுப் பதான், மணீஷ் பாண்டே ஆகியோர் என்ன செய்வார்கள் என்று எளிதில் முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது.

அதேபோல் கொல்கத்தாவின் மோர்னி மோர்கெல், உமேஷ் யாதவ் மற்றும் சுனில் நரைன், பியூஷ் சாவ்லா ஆகியோர் ஷேவாக் மட்டுமல்லாமல் பஞ்சாப் அணியில் உள்ள பலமான துடுப்பாட்டக்காரர்களை சமாளிப்பதை பொறுத்தே கிண்ணத்தை கைப்பற்றும் நிலைமை தெரிய வரும்.

கண்டிப்பாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றும் இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதை மறுக்க முடியாது. மேலும் எந்த அணி எழுச்சி பெறும், எந்த அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதை கணிக்க முடியாது.

Post a Comment

0 Comments