facebook

தனி ஈழம் அமைக்கும் முனைப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது : ஐ.தே.க

தனி ஈழம் அமைக்கும் முனைப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தனி ஈழமொன்றை அமைப்பது குறித்து இலங்கை மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு மத்தியில் சர்ஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கை ஏற்புடையதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கை மற்றும் நாட்டின் பௌதீக ஒருமைப்பாடு ஆகியன தொடர்பில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதனாலும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதனாலும் சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளையே இலங்கை அரசாங்கம் மீறி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமாயின் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வது வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச தலையீடுகளை வரையறுக்க இன்னமும் சந்தர்ப்பம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments