facebook

மோடியின் தாளத்துக்கு இலங்கை ஆடாது : உதய கம்மன்பில

ஜெயலலிதா சொல்வதற்கேற்ப மோடி ஆடலாம். ஆனால், இந்தியாவிற்கு ஏற்ப இலங்கை ஆடப்போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பினை நடாத்த வலியுறுத்தக் கோரும் ஜெயலலிதாவின் கருத்து தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-
  
இலங்கையில் பிரிவினையினைத் தூண்டி வடக்கினை தனி நாடாக மாற்றும் தந்திரத்தினை இந்தியா கையாள்கிறது. தமிழ் மக்களை சீண்டி அவர்களை மீண்டும் போராட வைக்கும் சுயநலத் திட்டத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்நாடும் மேற்கொள்கிறது. இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம். இலங்கையில் தனித் தமிழீழத்தினை உருவாக்க சிங்கள மக்கள் இடமளிக்கமாட்டார்கள். தமிழ் மக்களும் இதற்கு விரும்பவில்லை. எனினும், தனி நாட்டு ஆசையினைக் காட்டி தமிழர்களை மீண்டும் போராளிகளாக்க வேண்டாம். யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களே தமிழர்களை உணர்த்தியிருக்கும். தற்போது மேலும் இழப்புக்களை சந்-திக்க அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.
தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தினை வன்மையாக நாம் கண்டிக்கின்றோம். அதேபோல் இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான பதிலை வழங்கப்போகின்றது என்பதையும் எதிர்பார்க்கின்றோம். மோடியின் ஆட்சி இந்தியாவிற்கு மட்டுமே தவிர இலங்கைக்கு அல்ல. அதனை ஜெயலலிதாவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதா சொல்வதற்கேற்ப இந்தியப் பிரதமர் ஆடமுடியும். அது இந்தியாவின் தன்மையாகக்கூட இருக்கும். ஆனால், இந்தியா சொல்வதற்கேற்ப இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஆடத்தயாராக இல்லை. அவ்வாறு செயற்பட நாம் விடப்போவதும் இல்லை. இலங்கை-இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே உறவினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிரிவினைவாத செயற்பாடுகளையெல்லாம் நாம் ஏற்கப் போவதில்லை.
அரசியல் ரீதியில் இரு நாடுகளுக்கிடையே உறவு இருக்கிறது. ஆயினும் அவை ஒரு எல்லைக்கு உட்பட்டதே. ஜெயலலிதா இலங்கை விடயத்தில் தலையிட எந்த உரிமையும் இல்லை. அவரின் ஆட்சி தமிழ் நாட்டில் மட்டுமே என்பதை எப் போதும் அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments