facebook

வாக்காளர் பதிவு முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் - கபே

வாக்காளர் பதிவு முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வாக்காளர் பதிவு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுவதாக கபே தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பில் பங்கேற்க வாக்காளர்கள் நாட்டம் காட்டாமை மற்றும் வாக்காளர் பதிவு தொடர்பிலான நடவடிக்கைகளை அதிகாரிகள் உரிய முறையில் மேற்கொள்ளாமை ஆகிய காரணிகளினால் இவ்வாறு வாக்காளர் பதிவு துல்லியமான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் சுமார் 400,000 புதிய வாக்காளர்களை வாக்காளர் இடாப்பில் இணைத்து கொள்ளும் அதேவேளை, பெரும் எண்ணிக்கையிலானவர்களின் பெயர்கள் விடுபட்டு போய்விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர் பதிவு சரியான முறையில் நடைபெறாவிட்டால் சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடாத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தற்போது அமுலில் உள்ள வாக்காளர் பதிவு முறைமை காலம் கடந்ததொன்றாகும் என கபே அறிவித்துள்ளது. புதிய முறைமை ஒன்றினை அறிமுகம் செய்து துல்லியமாக வாக்காளர்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது என கபே சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments