facebook

ஜனாதிபதி சகல அமைச்சுப் பதவிகளையும் துறக்க வேண்டும் - ஜாதிக ஹெல உறுமய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அமைச்சுப் பதவிகளையும் துறக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைப் பிரடகன நிகழ்வில் பங்கேற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி துறக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாரியளவிலான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் இயங்குவது பொருத்தமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பது நியாயமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்காவிட்டால் மட்டுமே ஏனைய அமைச்சர்களின் குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டித் திருத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

விருப்பத் தெரிவு முறையிலான தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், மாகாணசபை தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். ஜனநாயக நாடு என்ற ரீதியில் மக்கள் தங்களது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சுச் செயலாளர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை, நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை போன்றவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

Post a Comment

0 Comments