facebook

முஸ்லிம் காங்கிரஸை அங்கீகரிக்காமை அபத்தமானது : ரவூப் ஹக்கீம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸை அங்கீகரிக்காமை அபத்தமானது என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவையில் அறிக்கை ஒன்றை விடுக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பிரதி சபாநாயகர் அனுமதி வழங்காததையடுத்தே ஹக்கீம் இவ்வாறு கூறினார். கட்சித் தலைவர் என்ற வகையில் நிலையியற் கட்டளை 23(2)க்கு அமைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கூறிய ரவூப் ஹக்கீம் தம்புள்ளை பள்ளிவாசல் பற்றி ஓர் அறிக்கையை விடுக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரினார்.
  
நியதி சட்டத்தில் கட்சித்தலைவர் என்ற வகையில் அறிக்கை ஒன்றை விடுக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், நாடாளுமன்றில் நான்கு கட்சி தலைவர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறினார்.
மேலும் அறிக்கை ஒன்றை விடுக்க முன்னர் இந்த விடயத்தை ரவூப் ஹக்கீம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டுமென அவர் கூறினார். இதை ஆட்சேபித்த ஹக்கீம் தன்னை கட்சித்தலைவராக அங்கீகரிக்காதது அபத்தமானது என்றார். அப்படியாயின் தனக்கு ஏன் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் வினவினார். இது அர்த்தமற்றது என அவர் கூறினார்.
இச்சமயத்தில் குறுக்கிட்ட எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹக்கீம் இந்த பிரச்சினையை அமைச்சரவையில் எழுப்ப வேண்டும். அரசாங்கம் திருப்தியான முடிவை தராதுவிடின் அவர் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கூறியதுடன் கடந்த பொது தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க பட்டியலில் போட்டியிட்டது என்பதையும் அவர் ஞாபகப்படுத்தினார்.
அதற்கு ஐ.தே.க செய்வதறியாத நிலையில் உள்ளதால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திலிருந்து விலக வைப்பதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வமாக இருப்பதாக ஹக்கீம் பதிலடி கொடுத்தார்.

Post a Comment

0 Comments