facebook

சிரிய ஜனாதிபதி தேர்தலில் பஷார் அல் ஆசாத்துக்கு வெற்றி வாய்ப்பு

சிரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பஷார் அல் ஆசாத்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய ஜனாதிபதி ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 2000ம் ஆண்டில் மறைந்த பின்னர் அவரது மகன் பஷார் அல் ஆசாத் ஜனாதிபதியாய் பதவி ஏற்றார்.
இதன்பிறகு நடந்த அடுத்தடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று தன் ஆட்சியை சர்வாதிகார ஆட்சியாக நிலைநாட்டி வந்தார்.
ஆனால் இவரது போக்கு மக்களுக்கு பிடிக்காமல் போனதால், கடந்த 2011ம் ஆண்டு முதல் அமைக்கப்பட்ட சுதந்திர படையில் உள்ள போராட்டக்காரர்கள் இவருக்கு எதிராக உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர்.
இதில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவார்கள். 65 லட்சம் பேர், போரினால் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆசாத்திற்கு எதிராக தொழிலதிபர் ஹசன் அல் நூரியும், முன்னாள் அமைச்சர் மஹர் ஹஜ்ஜாரும் களத்தில் உள்ளனர்.
மிரட்டல்களுக்கு இடையே நடந்த தேர்தலில் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்த அரபி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சிரியாவில் பாதுகாப்பு வலுப்படும் என்றும் ஸ்திரத்தன்மை உருவாகும் என நம்புகிறோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு , “கடவுள் விருப்பப்படி பஷார் அல் ஆசாத் வெற்றி பெறுவார்”என அவர் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையே தேர்தலில் மிகுந்த மோசடிகளை ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் அரங்கேற்றுவார் என்று எதிர்க்கட்சிகளும், மேற்கத்திய நாடுகளும்  அவர் மீது குற்றம் சாட்டியுள்ளன.
எனினும் இந்த தேர்தலில் ஜனாதிபதியாய் அல் ஆசாத் தான் மீண்டும் வெற்றி பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.

Post a Comment

0 Comments