facebook

முல்லைத்தீவில் அத்துமீறி மீன்பிடித்த 18 மீனவர்கள் கைது

நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் ஒளி பாய்ச்சி மீன்பிடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 18 சிங்கள மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நேற்று வசமாக மாட்டிக் கொண்டனர். முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்கள் ஒளியைப் பாய்ச்சி மீன்பிடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை அடுத்து பிரதிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தலைமையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் நான்கு வள்ளங்களில் சட்டவிரோதமான தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 18 மீனவர்களைக் கைதுசெய்தனர்.
  
இவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய நான்கு படகுகளையும் அவற்றுக்குரிய இயந்திரங்களையும் மற்றும் நான்கு ஜெனரேட்டர், சுருக்கு வலைகள் என்பவற்றையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை நேற்று முல்லை மாவட்ட நீதிவான் முன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர்.இவர்களில் எட்டு மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான், மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள், வலைகள், ஜெனரேட்டர்கள் அனைத்தையும் அரச உடைமையாக்கும்படி உத்தரவிட்டார். குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த 10 மீனவர்களை தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு படகுகளையும் தலா 3 லட்சம் ரூபா காசுப் பிணையிலும் விடுவித்தார்.

Post a Comment

0 Comments