facebook

மோடி - மகிந்த பேச்சில் இரண்டு விவகாரங்களுக்கு முக்கியத்துவம்!

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று புதுடில்லி சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, புதிய இந்தியப் பிரதமருடன் இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுக்களில் மீனவர் பிரச்சினை, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணல் ஆகிய இரு விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
  
மோடி பதவியேற்கும் நிலையில் தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நேற்று அறிவித்திருந்தார். இந்த நல்லெண்ண நடவடிக்கையை மோடி உடனடியாகவே வரவேற்றிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று டில்லி செல்லும் இலங்கைத் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இடம்பெறுகின்றார்கள்.வெளிநாட்டு அதிதிகளுக்காக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கும் வரவேற்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும், அமைச்சர் பீரிசும் பங்குகொள்வார்கள் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments