facebook

தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பல நாடுகள் விலகிப் போவதை எடுத்துக் காட்டுகின்றன

சென்ற ஞாயிற்றுக்கிழமை (25.05.14) இடம் பெற்ற ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஐரோப்பிய நாடுகளிற் பல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிப் போவதை எடுத்துக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் சந்தேகப்படும் அரசியல் வாதிகளினதும், தீவிரவாத வலது சாரிகளினதும் பக்கம் ஒரு கண்டம் சார்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பி(f)ரான்ஸ் நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஜனாதிபதி வி(f)றான்சுவா கோலாந்தின் தவறான அரசியல் அணுகு முறையும், வலதுசாரிக் கட்சிகளின் தேசியக் கூட்டு முன்னணிக்கு (FN) 24.9 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியினரை விட ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் முன்னணியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பியப் பாராளுமன்றம் விதித்திருந்த கடும் சிக்கன நடவடிக்கைகளையும், வேலையாட்களைக் குறைக்கும் திட்டத்தையும் மாற்றியமைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் பி(f)ரான்ஸ் நாடு வெளியேற உதவப் போவதாக அளித்திருந்த உறுதி மொழி, மாறீன் லீ பென் தலைமை தாங்கும் தேசிய முன்னணியினரை முன்னிலைக்குக் கொணர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளி நாட்டவரின் குடியேற்றத்தைக் கடுமையாகக் குறைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதியளித்த வலது சாரிக் கட்சியான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி 27 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்திலும், முக்கிய எதிர்க்கட்சியான தொழிற் கட்சி 25 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், டேவிட் கமரோனின் ஆளும் கட்சியான பழமைக் கட்சி 24   சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டென்மார்க்கிலும் வலது சாரிக் கட்சி 23 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னனியில் நிற்பது குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்தாலியில் முதன் மந்திரி மற்றியோ றென்ஸியின் சுதந்திரக் கட்சி 40 சதவீத வாக்குகளைப் பெற்று, ஐரோப்பாவின் பழமைக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட இருப்பினும், வலது சாரிக் கட்சி அங்கும் 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல நாடுகளில், மக்கள் பழமைக் கட்சிகளுக்கு அதிகமாக வாக்களித்திருப்பதாகத் தெரியவருகிறது. ஜெர்மனிலும் பழமைக் கட்சியான CDU 30 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியிலுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், கடும் சிக்கன நடவடிக்கை, தொழில் நுட்பக் கல்வித் திட்டங்களில் திருப்தியற்ற நிலை, கடுமையான வெளி நாட்டவர்களின் குடியேற்றம், மிகவும் குறைந்த ஊதியத்திற்கு  கிழக்கு ஐரோப்பிய மக்கள் வேலையில் அமர்த்தப்படும் நிலை போன்றவை ஐரோப்பிய மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், ஒன்றிய அமைப்பின் மேல் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments