facebook

பரிசாக கொடுத்த காணியை பறித்துக் கொண்டது அரசாங்கம்! நீதிமன்றத்தில் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

யுத்த வெற்றியின் பின்னர் தனக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்ட காணியொன்றை கையகப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். தனது காணி கையகப்படுத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போதே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
  
யுத்த வெற்றியின் பின்னர், முப்படைகளின் தளபதிகளுக்கு கொழும்பு நகரில் காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகக் கூறியுள்ள சரத் பொன்சேகா, அதன்படி கொழும்பு கிரிமண்டல மாவத்தை பகுதியில் தனக்கும் காணியொன்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.இதன்போது, சம்பந்தப்பட்டக் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை காணி சட்ட விதிமுறைகளுக்கு அமைய முறையான விசாரணை நடத்தப்பட்ட பின்னரே காணிகளை கையகப்படுத்த முடியும் என்ற போதிலும், தனது காணி கையகப்படுத்துவதற்கு முன்னர் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறிய சரத் பொன்சேகா, தனக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த மனுவை நீதிமன்றம் தொடர்ந்து விசாரணைக்காக ஏற்றுக்கொள்ள திர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 19ம் திகதியன்று தமது தரப்பு விளக்கங்களை முன்வைக்குமாறு காணி அமைச்சருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments