facebook

நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது – சட்டத்தரணிகள் சங்கம்

நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படும் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிமாவட்ட நீதிமன்றங்களிலும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பிலான வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அடிப்படை உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்ட விதம் பிழையான முன்னுதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இரண்டு பிரதான நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறியே பாராளுமன்றம் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்து விசாரணை நடத்தப்படுவதனால் பணமும் நேரமும் விரயமாவதனால் மக்கள் அதனை விரும்பவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

எனவே, நீதிமன்றுக்கு செல்லாது பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வினை எட்டவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments