facebook

யாழ்பானத்தில் படைமுகாம்களிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ்.குடாநாட்டில் மீண்டும் படைமுகாம்களிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்:-
யாழ்.குடாநாட்டில் மீண்டும் படைமுகாம்களிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதன் பிரகாரம் வடமராட்சியின் கரையோரக்கிராமமான திக்கத்தில் பொதுமக்களது காணிகளை சுவீகரிக்கும் வகையில் நில அளவீடு செய்யும் பணிகள் இன்று காலை முதல் படையினரது கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.

குறித்த காணி தனியாருக்கு சொந்தமான காணியெனவும் கடந்த ஒருவருட காலப்பகுதியினுள்ளேயே புதிய படைத்தளமொன்று அவசர அவசரமாக படைத்தரப்பினால் இங்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு அமைக்கப்பட்ட படைத்தளத்தை நிரந்தர தளமாக்க ஏதுவாகவே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ,ன்று காலை நில சுவீகரிப்பிற்கு ஏதுவாக நில அளவை செய்யும் பணிகளில் நில அளவைத்திணைக்கள பணியாளர்கள் ஈடுபட முற்பட்ட போது காணிகளது உரிமையாளர்கள் அதனை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளை கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்கள் சுகிர்தன் மற்றும் சிவாஜிலிங்கம், சிவயோகன் ஆகியோரும் தமது ஆதரவை தெரிவித்து அங்கு நேரில் பிரச்சன்னமாகியிருந்தனர். தம்மை நில அளவைபணிகளில் ஈடுபட அனுமதிக்காவிடின் காவல்துறையின் உதவியுடன் அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்போவதாக  நில அளவைத்திணைக்கள பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படையினரது பிரச்சன்னத்தின் கீழ் தற்போது அங்கு அடாத்தாக நில அளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்நடவடிக்கைகளை கண்டித்து மக்களை அணி திரட்டிப் போராடப்போவதாக கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இதே வேளை காணி உரிமையாளர்கள் சட்டரீதியாக காணி சுவீகரிப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்;. அதே போன்று அச்சவேலியினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெருமளவு காணிகளை படையினரிற்கு கையகப்படுத்த ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கும் நில அளவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments