facebook

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 'புலிகள்' மூவரும் பற்றிய விபரங்களை வெளியிட்டது பொலிஸ் தலைமையகம்

மலேஷியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் என்று கூறப்படும் மூன்று பேர் பற்றிய விபரங்களை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கத்தில் முல்லைச்செல்வன் என்றழைக்கப்பட்ட சந்திரலிங்கராஜா குஷாந்தன் (வயது 45), மீசாலை வடக்கைச் சேர்ந்தவர். இவர் 94 ஆம் ஆண்டு புலிகளின் அரசியல்துறையில் இணைந்து அதன் பின்னர் புலிகளின் விமானப்படைப் பிரிவில் இணைந்துள்ளார்.
  
புலிகளின் சங்கர் மாஸ்டர் என்பவரின் சகோதரரின் மகளை புலிகளின் தலைவர் பிரபாகரனின் விசேட அனுமதியுடன் திருமணம் செய்து கொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு மலேஷியாவுக்கு சென்றுள்ளார். மலேஷியாவில் இலக்ரோனிக் என்ஜினீயரிங் கற்று தொழில் புரிந்தவாறு புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டாவது நபரான மகாதேவன் கிருபாகரன் (வயது 42) நல்லூர் கோவில் வீதியை சேர்ந்தவர், புலிகளின் இசைக் குழுவில் இணைந்து பாடல்கள் மூலம் புலிகளின் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தவர். புலிகளின் இசைக் குழுவுடன் 2002 ஆம் ஆண்டு நோர்வே சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மலேஷியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதுடன் அங்கிருந்து பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். இவரது எல்.ரீ.ரீ. ஈ பெயர் என்ன வென்பது பற்றி விசாரணைகள் நடைபெறுகின்றன.
மேற்படி, இருவருக்கும் இன்டர்போல் ஊடாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்ததுடன், பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மூன்றாவது நபர் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் பொட்டு அம்மானின் உதவியாளராக செயல்பட்டு வந்தனர். நல்லூரைச் சேர்ந்த செல்லத்துரை கிருபானந்தன் (வயது 38) 1989/99 காலப் பகுதியில் கொழும்பில் கடையொன்றில் (சிறுவனாக) தொழில் புரிந்தவாறு புலிகளுக்கு புலனாய்வு தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு மலேஷியாவுக்கு தப்பிச் சென்ற இவர் 2013 ஆம் ஆண்டு மலேஷியாவில் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்டர்போல் ஊடாக ரெட் அலர்ட் விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐரோப்பாவிடம் ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் எல். ரீ. ரீ. ஈ யை மீள உருவாக்குவதற்கான முயற்சிகளில் இந்த மூவரும் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மலேஷியாவில் கடந்த 15 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரையும் இலங்கையிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் ஆறு அதிகாரிகள் மலேஷியா சென்று அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இரவு 10.00 மணியளவில் அங்கிருந்து விசேட பாதுகாப்புடன் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments