facebook

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்


இந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்று வருகின்றனர். 

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் முன்னுள்ள வெளிமுற்றத்தில் நடைபெற்றுவருகின்ற ஒரு வண்ணமிகு விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்துவருகிறார். 

புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜேட்லிக்கு நிதியமைச்சகமும் கூடுதலாக பாதுகாப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களுக்கு அப்பாற்பட்டு, கூட்டணியின் கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவையில், 23 காபினெட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய 10 இணை அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும் அடங்குவர். 

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்களான வெங்கைய்யா நாயிடு மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர். 

புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில், தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பாராளுமன்ற மேலவையின் முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் பேச்சாளர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் கன்னியாகுமரித் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன் ராதாகிருஷ்ணன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் வி கே சிங்கும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

மனேகா சஞ்சய் காந்தி புதிய அமைச்சரவையில் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராகியுள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதி, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் காபினெட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட தெற்காசியத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

வைபவம் நடக்கும் இடத்தைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இராணுவ ஸ்னைப்பர் துப்பாக்கி வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொருத்திவைக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments