facebook

அரசு கல்வியை நாசப்படுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை ஆதாரத்துடன் நிரூபித்தால் ஜனாதிபதி பதவி விலகுதாக அறிவிப்பு

நாட்டின் கல்வியை பாதிப்படையச் செய்யக்கூடிய வகையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஐதேக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என  எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார் என இன்று (28) பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நான் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வினவியபோது தான் அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதாரத்துடன் முன்வைத்தால் உடனடியாக பதவி விலகத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்றுமாலை (28) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-  இலங்கையில் இதற்கு முன்னர் கல்வியை தனியார் மயப்படுத்துங்கள் - பாடசாலைகளை மூடுங்கள் என்ற கோஷங்களே எழுப்பட்டு வந்தன. ஆனால் இன்று அந்நிலைமை மாறியுள்ளது.

நகர பாடசாலைகளுக்கும் உயர் பாடசாலைகளுக்கும் மட்டுமே கிடைத்த பல கல்வி வாய்ப்புக்கள் இன்று கிராம பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயற்படுபவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே.

இன்று மஹிந்தோதய ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மஹிந்தோதய தொழில்நுட்ப கூடங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் தொழில்நுட்ப கூடம்- மொழிகள் கூடம்- கணித கூடம் என இதுவரையில் இல்லாத வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.

மஹிந்த சிந்தனையில் கீழ் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு தற்காலத்தில் ஏற்றவகையில் மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள இந்த அரச வழிகோலியுள்ளது.

இதுவரை வடக்கில் 90 மஹிந்தோதய தொழில்நுட்ப கூடங்களும் கிழக்கில் 103 தொழில்நுட்பக்கூடங்கள் ஊவா மாகாணத்தில் 88 தொழில் நுட்பக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கை வந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்மட்டக்குழு எமது நாட்டில் ஏற்பட்டுள்ள கல்வி அபிவிருத்தியைக் கண்டு மிகவு வியந்தது.

மேலும் இலங்கையை முன்மாதிரியாகக்கொண்டு ஏனைய நாடுகளிலும் கல்வியை அபிவிருத்தி செய்ய ஐநா நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கை சமர்ப்பிக்கப்போவதாக அந்தக் குழு தெரிவித்தது. அந்தளவுக்கு கல்வியில் அபிவிருத்தி காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments