facebook

வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது

வலி.வடக்கு மக்களை வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேற்று இது பற்றித்தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே; டக்ளஸ் தேவானந்தா இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.   யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கடந்த கூட்ட அறிக்கை தொடர்பிலான விடயங்கள் ஆராயப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்புத் தொடர்பில் அரசினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை மீளப்பெறவேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.  அந்தத் தீர்மானம் அரசுக்கு அறிவிக்கப்பட்டதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா கேள்விஎழுப்பினார்.   அன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வந்தமையால், இந்தக் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை என்று பொதுவாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய அது அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் பதிலளித்திருந்தார்.



இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, கடந்த கூட்டம் இடம் பெற்ற பின்னர் கீரிமலையில் காணி சுவீகரிப்பு இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.   இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வளலாயில் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருக்கின்றனர்.அவர்களது காணிகளைச் சுவீகரித்து அந்தக் காணிகளில் வேறு மக்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது முறையற்ற செயல்.இதனை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.   இதன் போது பதிலளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்படி குடியேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் கூறினார்.

வளலாயில் உள்ள காணிகளை பார்வையிட அனுமதியில்லை; இராணுவப் பேச்சாளர்
20-05-2014 -01:39
அதி உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வளலாய் பகுதியில் தெரிவு செய்யப்பட்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளை அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே அந்தப் பகுதியைச் சென்று பார்வையிடுவதற்கு மக்களை அனுமதிக்க முடியாது இவ்வாறு தெரிவித்துள்ளார்  இராணுவப் பேச்சாளர் ருவான் வணிக சூரிய.

இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலகத்தினால் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு கடிதம் மூலம் அனுப்பப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே மக்கள் தமது காணிகளைச் சென்று பார்வையிடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று முதல் 24ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக காணிகளை அடையாளயப்படுத்த ஒழுங்கு கள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இராணுவப் பேச்சாளர் இவ்வாறானதொரு அறிவித்தலை விடுத்துள்ளார்.

வளலாய் மேற்கு மற்றும் வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பகுதிகளில் 224 குடும்பங்கள் மீளக் குடியேறுவற்காக பதிவுகள் மேற்கொண்டுள்ளன. இந்தக் குடும்பங்களின் காணிகள் உள்ளடங்கலாக குறித்த வளலாய் வடக்குப் பிரதேசத்தில் சுமார் 230 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு அந்தக் காணிகளில் வலி. வடக்கு மக்களை குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வலி.வடக்கிலிருந்த இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் வழங்கி மாதிரிக் கிராமத்தில் குடியேற்ற நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

""பலாலி இராணுவ முகாமிற்கு சமீபமாகவுள்ள வளலாய்ப் பகுதியில் சுமார் 230 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு காணியை இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் இந்த பகுதி காடாகி காணப்பட்டமையால் அதனை உரிய முறையில் அளவீடு செய்ய முடியாமல் போயிருந்தது.

இராணுவப் பொறியியல் பிரிவினரால் குறித்த காணி சுத்தம் செய்யப்பட்டு தற்போது காணி அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளன. காணி அளவிடும் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் இடம்பெயர்ந்துள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களை மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வளலாய் மக்கள் இன்று முதல் தமது காணிகளைப் பார்வையிடலாம் என்று யாழ்.மாவட்டச் செயலகத்தினால் கோப்பாய் பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்ட அறிவித்தலை இராணுவப் பேச்சாளர் முற்றாக நிராகரித்துள்ளார்.

""வளலாய்ப் பகுதிகளைப் பார்வையிடுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காணியை பார்வையிடுவதற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது காணி அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்பதால் காணிகளை பார்வையிட முடியாது. காணி அளவிடும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரே அதற்கான வாய்ப்பு கிட்டும்'' என்று ருவான் வணிக சூர்ய குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments