facebook

உக்ரைன் புதிய ஜனாதிபதி உடன் பேச ரஷ்யா விருப்பம்

உக்ரைனின் புதிய ஜனாதிபதி பொறோஷெங்கோ உடனான பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் புதிய அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாரெனவும், பிரதிநிதிகள் எவரும் தேவையில்லை எனவும் ரஷ்ய வெளிவிவகாரச் செயலர் செர்ஜெவ் லறொவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (25.05.14) உக்ரைனில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொறோஷெங்கோ 54.09 சத வீத வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மக்களின் அரசியல் முடிவைத் தாம் ஆதரிப்பதாகக் கூறிய ரஷ்ய வெளிவிவகாரச் செயலர், தேர்தல் முடிவை வார்த்தைப் பிரயோகங்களால் அங்கீகரிக்கவில்லையெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

ரஷ்யாவின் முடிவை ஆதரிப்பதாகவும், உக்ரைனின் புதிய அரசாங்கத்தோடான சுமூக உறவை நிர்மாணிக்க வல்லதாக          ரஷ்ய - உக்ரைன் பேச்சுவார்த்தை அமையுமென நம்புவதாகவும் ஜேர்மன் பாராளுமன்றப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பொறோஷெங்கோவும் மொஸ்க்கோ உடனான பேச்சு வார்த்தைக்குத் தாமும் தயாரென அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரஷ்ய மக்கள் செறிந்து வாழும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி அலுவலக மொழியாகவும், எவ்வகையிலும் அதன் அந்தஸ்த்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படாதெனவும் உக்ரைனின் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தலையீடில்லாது கிழக்கு உக்ரைனில் அமைதியை சாதிக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அதே வேளை ரஷ்ய ஆதரவாளர்களான பிரிவினைவாதிகள் புரட்சிக்காரர்கள் என்றும், அவர்களோடான பேச்சு வார்த்தைக்கு எந்நிலையிலும் தான் இடமளிக்கப் போவதில்லை எனவும், பொறோஷெங்கோ கூறியமை குறிப்பிடப்பட்டுள்ளது. 

புரட்சியைத் தடுக்கும் முன்னெடுப்பெனும் பேரில், கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து இடம் பெறும் ராணுவத் தாக்குதல்கள் மிகப்பெரிய தவறெனவும், உடனடியாகக் கிழக்கு உக்ரைனில் இடம் பெறும் ராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், ரஷ்ய வெளிவிவகாரச் செயலர் எடுத்துக் கூறியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments