facebook

ராஜபக்ஷ வருகையை எதிர்த்தது தவறு! கேர்ணல் ஹரிஹரன்

தமிழக அரசியல் கட்சிகள் ராஜபக்ஷவின் வருகையை இவ்வளவு கடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு விரோதமானது.
மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது.
இந்திய இரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.
இந்த நிகழ்வால் பாகிஸ்தான், இலங்கை உடனான வெளியுறவுக் கொள்கைகள் அடியோடு மாறிவிடும் என்றோ அற்புதம் நிகழ்ந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பதிலும், இது மிகப்பெரிய இராஜதந்திர நடவடிக்கை என்று பாராட்டுவதிலும், எந்த அர்த்தமும் இல்லை. அப்படி எதுவும் நடந்துவிடவும் முடியாது.
வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான முடிவுகள், இரு நாட்டுப் பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், அதற்கான ஆலோசனைகள், திட்டங்கள் எல்லாம் முற்றிலும் வேறு முகம் கொண்டவை.
அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் ராஜபக்சவின் வருகையை இவ்வளவு கடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு விரோதமானது. இவர்கள் அனைவரும் தமிழர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று உண்மையாக நினைத்திருந்தால், நிச்சயமாக அவ்வளவு கடுமையாக ராஜபக்ச வருகையை எதிர்த்திருக்க மாட்டார்கள்.
தமிழக முதலமைச்சர் மற்றும் ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் இந்த எதிர்ப்பு, அங்கு முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
முள்வேலி முகாம்களுக்குள் இருக்கும் தமிழர்களை அங்கிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமானால், அந்த நாட்டில் தனி மெஜாரிட்டியுடன் இருக்கும் ராஜபக்சவோடு நீங்கள் சுமுக உறவை வளர்த்தால் மட்டுமே சாத்தியம்.
அப்படிப்பட்ட உறவை ஏற்படுத்த, இதுபோன்ற சமயங்களில் இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எதிர்ப்பதும் கோஷம் போடுவதும் கொடும்பாவி எரிப்பதும் கட்சிக்கு ஆள் சேர்க்கத்தான் பயன்படுமே தவிர, இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு உதவாது.
இன்றும் இலங்கையில் கொழும்பு உள்பட முக்கியமான நகரங்களில் வாணிபம் செய்துகொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள். அது இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டச் சூழலில் இவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, யாரும் சிந்திப்பது இல்லை.
இன்றுள்ள உலக அரசியல் சூழலில் இந்திரா காந்தி பங்களாதேஷில் செய்த போர் அரசியலை செய்ய முடியாது. நம்மால் மட்டுமல்ல... அமெரிக்காவால்கூட அப்படிச் செய்ய முடியாது. அதனால்தான் சிரியா, லிபியா, உக்ரைன், வட கொரியா விவகாரத்தில் அமெரிக்கா அடக்கி வாசிக்கிறது.
அதுபோல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியது போன்ற போராளி இயக்கத்தை இனிமேல் எந்த நாட்டிலும் யாரும் நடத்த முடியாது. இதை எல்லாம் நன்றாக யோசித்துப் புரிந்துகொண்டு, தங்களின் அடிப்படையான அரசியல் நிலைப்பாட்டை தமிழக அரசியல் கட்சிகள் மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டுமே தமிழகத்தின் பிரச்னை அல்ல. இங்குள்ள பல பிரச்னைகளில் அதுவும் ஒரு பிரச்சினை. அதைப் புரிந்துகொள்ளாமல், ராஜபக்சவின் வருகையைக் காரணம் காட்டி, வலுவான பிரதமராக உருவெடுத்து இருக்கும் மோடியின் அழைப்பை நிராகரித்ததன் மூலம், தமிழகத்தின் நலனையும் இவர்கள் நிராகரித்துள்ளனர்.
ஏனென்றால், தமிழகத்தின் தயவில் மத்திய அமைச்சரவை நடந்துகொண்டிருந்தபோது, இவர்களில் 12 பேர் அங்கு அமைச்சர்களாக இருந்தபோதே, தமிழகத்துக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இப்போது தொடக்கத்திலேயே மத்திய அரசை அவமதித்துவிட்டு, எந்த முகத்தோடு தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றைப் போய் கேட்பார்கள்?
மத்திய அரசோடு சுமுக உறவு, அண்டை நாடுகளோடு இணக்கமான போக்கு ஆகியவற்றை வளர்க்க இவர்கள் முன்வர வேண்டும். அதுவே தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.'' - தீர்க்கமாக சொல்கிறார் கேர்ணல் ஹரிஹரன்.

Post a Comment

0 Comments